கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் 5-ஆவது நாளாக கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து முதன்முறையாக இன்று நினைவிடத்திற்கு வந்தார். பின்னர், அவர் அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மு.க.முத்து உடல் சோர்வுடன் நடக்க முடியாமல் இருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் முத்துவை அழைத்து வந்தனர்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. தந்தையின் கலையுலக வாரிசாக கருதப்பட்ட இவர் பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மு.க.முத்து குறித்து அண்மைக்காலமாக தகவல்கள் ஏதும் வெளிவராதநிலையில், அவர் இன்று முதன் முறையாக கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் வந்த திமுக எம்.பி. கனிமொழி, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பெண்கள் கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகை ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று வார விடுமுறை நாள் என்பதால், கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Related posts

Leave a Comment