உலக சுற்றுச்சூழல் தினம்!

உலகமெங்கும் வருடா வருடம் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நாம் வசிக்கும் பூமியின் தேவையை, பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட வாசகத்துடன் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான சுற்றுச்சூழல் தின வாசகம் ”காற்று மாசுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்” என்பதே.

உணவில்லாமல், நீர் இல்லாமல் கூட சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்துவிட முடியும் .ஆனால் மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியுமா? காற்று என்பது தான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை. உயிரினங்களையும் இந்த உலகத்தையும் இயக்கும் காற்று, நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தத்துக்கு உரியது.

காற்று மாசு என்பது உயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். அந்த தாக்குதலுக்கு காரணமும் நாம் தான் என்பது மறுப்பதற்கில்லை. காற்று மாசு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் பேரைபலிவாங்கி வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள். காற்று மாசால் ஏற்படும் நோயினால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 800 நபர்கள் உயிரிழக்கின்றனர்.

2016ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி உலகில் மாசடைந்த 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் நகரம் அதிகம் மாசான நகரமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் 9 லட்சம் பேர் காற்று மாசால் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் புள்ளிவிவரம் அளித்தது.

டெல்லி, ஆக்ரா, லக்னோ, வாரனாசி, பாட்னா உள்ளிட்ட வட இந்திய நகரங்கள் அதிகம் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு பல வழிகள் காரணமாக இருக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை, கட்டட வேலைகளில் இருந்து வெளியேறும் தூசுகள் என பல வழிகளில் காற்று மாசாகிறது. காற்று மாசுக்கு எல்லை கிடையாது. நகரங்களில் ஏற்படும் காற்று மாசு, எல்லை கடந்து கிராமங்களையும் பாதிக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் கூட விறகு அடுப்பு எரிப்பதால் மூச்சுப்பிரச்னைக்கு உள்ளாகிறார்கள்.

காற்று மாசு, மழை பொய்த்துபோதல், வெப்பமயமாதல் என சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்து காரணங்களுக்கும் ஒரே தீர்வு ‘பசுமை’. மரங்களை வளர்ப்பது மட்டுமே நாம் வாழும் பூமியையும் நம்மையும் காக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. எதிர்கால தலைமுறையிடமும் மற்ற உயிரினங்களுக்களிடம் நாம் ஆரோக்யமான பூமியை கொடுக்க வேண்டும். ஆரோக்யமான பூமிக்கு மரம் வளர்த்தல் மட்டுமே தீர்வு. பசுமை விதைத்து பூமியை காக்க சுற்றுச்சூழல் தினமானே இன்றே நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

Related posts

Leave a Comment