காஞ்சி: அத்திவரதர் தரிசன வைபவம்- கோலாகல தொடக்கம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் இன்று முதல் வரதராஜ பெருமாள் கோவில் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று துவங்குகிறது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு அத்தி வரதர் காட்சிதருகிறார். பொதுமக்கள் காலை 5:00 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

கோவிலைச் சுற்றி பக்தர்கள் வசதிக்காக சாலையில் ‘கூல் பெயின்ட்’ அடிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் 24 நாள் சயன கோலத்தில் அத்தி வரதர் காட்சிதருவார். பின் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.

Related posts

Leave a Comment