கர்நாடகாவில் குமாரசாமி கவர்மெண்ட் கவிழப் போகிறது?

கர்நாடகாவில், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா என போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது. 

கர்நாடக மாநில அரசியலில், கூட்டணி அரசு அமையும்போதெல்லாம், அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டுவது வாடிக்கையாக மாறிவருகிறது. கடந்த காலங்களைப் போன்று, தற்போது, H.D.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசு பொறுப்பேற்ற சில மாதங்களில் தொடங்கிய அரசியல் குழப்பம், தற்போது வரை ஓய்ந்தபாடில்லை.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை.

பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க 38 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜே.டி.எஸ். என சுருங்க அழைக்கப்படும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதலமைச்சராகவும், பரமேஸ்வர் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இவர்களது அமைச்சரவையில்,கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்த 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமேஷ் ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்து, எம்.பி.யானார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து, ஜே.டி.எஸ் -காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116ஆக குறைந்து விட்டது.

ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார். இதையடுத்து, தங்கள் ராஜினாமா கடிதங்களை, இருவரும் கர்நாடக ஆளுநர் வாஜூபாய்வாலாவிடம் வழங்கினர். ஆனால், அந்த கடிதங்கள் மீது இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மேலும், 11 எம்எல்ஏக்கள், தங்கள் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் சமர்பித்தனர். இவர்களில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் கோபாலய்யா தலைமையில், சில எம்எல்ஏக்கள் ஓர் அணியாகச் சென்று கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடமும், தங்கள் ராஜினாமா கடிதங்கள் அளித்தனர்.

இவர்கள் 11 பேருடன் சேர்த்து, 14 பேர், கூட்டணி அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், குமாராசாமி தலைமையிலான அரசு எந்தநேரத்திலும் கவிழும் சூழலுக்கு உள்ளாகியிருக்கிறது.

குமாரசாமியும், 2 அமைச்சர்களும் அமெரிக்காவிலும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டு ராவ் வெளிநாட்டிலும் இருப்பதால், முதல்வர் நாடு திரும்பும் வரை எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில், மொத்தமுள்ள 224 இடங்களில், பெரும்பான்மைக்கு, 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான பலம், அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரோடு சேர்த்து, 118ஆக உள்ளது. பாஜகவின் உறுப்பினர் பலம், 105ஆக உள்ளது. 13 பேர் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், தற்போதைய நிலையில், கூட்டணி அரசின் பலம், 105 ஆக மாறும்.

தற்போது போர்க்கொடி உயர்த்தியிருக்கும் 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் தவிர, மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால், பேரவையில், 105 என்ற பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றிருக்கும் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்படும்.

Related posts

Leave a Comment