இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி : ஆனா இது பொது தேர்தலுக்கான முன்னோட்டமா?..?

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதால் அக்கட்சியின் பலம் சட்டப்பேரவையில் 125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும்கூட 5 மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை படுதோல்விக்குத் தள்ளிய மக்கள் இப்போது திமுக, காங்கிரஸைப் புறக்கணித்திருப்பது பல்வேறு வாதங்களை எழுப்பியுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் ஒரு நியமன உறுப்பினரைச் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டமன்றத்தில், அதிமுகவின் பலம், 123 ஆக இருந்தது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் பலம், 101 லிருந்து 100 ஆக குறைந்தது.

இதே போல், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஹெச். வசந்தகுமார், மக்களவைக்கு தேர்வானதால், 8 உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 7 ஆக குறைந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேருடன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவை சேர்த்தால், திமுக கூட்டணி வசம், 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.

திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியும், காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியையையும் தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளதால், தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம், 123-லிருந்து 125ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் “இந்த இடைத்தேர்தல் முடிவை வைத்து இதுதான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று முழுக்க முழுக்க உறுதிபடத் தெரிவித்துவிட இயலாது.

அதேவேளையில், மக்களவைத் தேர்தல் முடிவை வைத்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அளவுகோலை நிர்ணயிக்கக் கூடாது என்பதை திமுக புரிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை ஏன் கூட்டணியைக் கூட திமுக இப்போதிருந்தே பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நாங்குநேரியைப் பொறுத்தவரை தேவேந்திர குல வேலாளர் சமுதாயத்தினரின் தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எதிர்ப்பு மனநிலையுடன் அவர்கள் வாக்களித்திருந்தால் அந்த வாக்குகள் அனைத்தும் காங்கிரஸுக்கே சென்றிருக்கும். உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாதும் காங்கிரஸுக்கு நிச்சயமாக பின்னடைவைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்ணின் மைந்தன் என்ற டேக்லைனுடன் அதிமுக வாக்குகளை சரியாக அறுவடை செய்துகொண்டது” என்று அரசியல் நோக்கர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment