அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி: முஸ்லிம்களுக்கு மாற்று இடம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம்  இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மாற்று இடமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று காலை அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு சன்னி வஃக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இதுதொடர்பாக முதலில் பல ஆண்டுகளாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கடந்த 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி உச்சநீதிமன்றத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தன.

கிட்டதிட்ட 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நசிர் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு ஏற்பாட்டின்படி, சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ‘வாழும் கலை’’ அமைப்பாளர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இவர்கள் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு இந்து, முஸ்லிம் அமைப்புகளை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

கிட்டதிட்ட 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால், மத்தியஸ்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதனால், அயோத்தி மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

கடந்த ஆக. 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்.

16ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்க்கப்பட்டது.

அதன்படி, நாளை காலை 10. 30 மணிக்கு (நவ. 9) தீர்ப்பு வெளியாக உள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

அதனால், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிச. 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைமை நீதிபதியே உத்தரப்பிரேதச தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், புலனாய்வு பணியகத்தின் (ஐபி) தலைவர் அரவிந்த்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அயோத்தி வழக்கு தொடர்பாக, தலைமை நீதிபதியின் அறைக்கு, சீல் செய்யப்பட்ட கவரில் இருந்த தீர்ப்பின் நகல்கள் எடுத்து செல்லப்பட்டன. இரு தரப்பிலிருந்தும் வக்கீல்கள் முன் வரிசையில் தங்கள் இடங்களில் அமர்ந்தனர்.

தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகளும் நீதிமன்ற அறைக்கு காலை 10. 30 மணிக்கு வந்தனர். 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்புகளை எழுதினர்.

5 பேர் சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.

அதன் விபரம் வருமாறு:

* அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் பாபர் மசூதி மீது உரிமை கோரி, ஷியா வக்ஃப் வாரியத்தின் மனு ஏகமனதாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

* சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவில் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

நிர்மோகி அகாராவின் வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தின் மேலாளர் என்பதையும் நிராகரிக்கப்படுகிறது.

* ஒரு மதத்தினரின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது.

நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் உள்ளது. தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவுகளையும் ஒதுக்கிவிட இயலாது.

* பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பே அந்த இடத்தில் இஸ்லாமிய முறையில் கட்டப்படாத கட்டிடம் ஒன்று இருந்திருக்கிறது.

மத நம்பிக்கையானது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது.

* ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.

* 1857ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்துக்கள் இந்த கட்டிடத்துக்குள் சென்று வழிபட தடை ஏதும் இருந்திருக்கவில்லை.

* அலகாபாத் உயர்நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து 3 தரப்பினருக்கும் தர வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பு தவறானது.

* 3 மாத காலத்தில் வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தினை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்க வேண்டும்.

* சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது.

சர்சக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்கள் நிரூபக்கவில்லை.

*. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதில், உறுப்பினர்களாக நிர்மோகி அகரா தரப்பினரையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment