ஊரக உள்ளாட்சிக்கு பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்…!

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 4,700 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 45,336 பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.

260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாகவும், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2544 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4924 ஊராட்சி தலைவர் பதவி, 38,916 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 46,639 பதவிகளுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, அந்தநல்லூர், மணிகண்டம், மருங்காபுரி, வையம்பட்டி, திருவெறும்பூர் ஒன்றியங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும்,

தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, அம்மாப்பேட்டை, பூதலூர் ஆகிய ஒன்றியங்களிலும், கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணிமலை, க. பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களிலும், நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம் ஒன்றியங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலுர், வேப்பூர் ஒன்றியங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர, செந்துறை ஒன்றியங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி ஒன்றியங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படை இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில், 3,643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் படி 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக தீவிரமாக பிரசாரம் நடந்து வந்தது.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் 28ம் தேதி மாலை 5 மணியுடனும் பிரசாரம் ஓய்கிறது.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று இறுதி நாள் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்தது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிந்ததும் வெளியூர்களில் இருந்து பிரசாரத்துக்கு அழைத்து வரப்பட்ட அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, விரலில் வைக்கும் மை, பேனா, முத்திரை, குண்டூசி, தீப்பெட்டி, படிவங்கள் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 72 பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த பொருட்களை பைககளில் போட்டு பேக்கிங் செய்யும் பணி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பொருட்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் நாளை ஒப்படைக்கப்படும்.

அவர்கள் இந்த பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். அந்தந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1 முதல் 5 ஊழியர்களும், பதற்றமான சாவடியில் ஒரு ஊழியர் கூடுதலாகவும் பணியில் இருப்பார்.

முதல்கட்ட வாக்குப்பதிவின் போது 60,918 காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர், 30ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது 61,004 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தலையொட்டி இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment