மாஸ்டர்’ சினிமா விமர்சனம்

‘மாஸ்டர்’ சினிமா விமர்சனம்.

வெள்ளித் திரைக்கு வந்துசேர, கடந்த சித்திரையிலிருந்து காத்திருந்த ‘மாஸ்டர்.’ கொரோனா மெர்சலுக்குபின், தளபதி ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் உற்சாகப் ‘பொங்கல்!’

தனது அநியாய அடாவடி கொலைபாதகச் செயல்களுக்கு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கைதியாக இருக்கிற சிறுவர்களை, இளைஞர்களைப் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. அந்த பள்ளிக்கு வாத்தியாராக வருகிற விஜய் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் அந்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டி திருத்தி, விஜய் சேதுபதிக்கு ரிவிட் அடித்து RIPபன் கட்டுகிறார். வழக்கமான ஹீரோயிஸக் கதை லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, விஜய் – விஜய் சேதுபதி என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் அதகள அட்டகாசத்தால் வேகமெடுக்கிறது.

தளபதி விஜய் முகத்தில் ஸ்டூடண்டு கலை, பார்ப்பது புரொபசர் வேலை என ‘தெறி’க்க விடுகிறார். அசத்தல் என்ட்ரீ, ஆக்ரோஷ சண்டை என அவர் வருகிற காட்சிகளில் விசிலால் அதிர்கிறது தியேட்டர்.

நாயகி மாளவிகா மோகனன், மலையாள மல்கோவா. நடிப்பதற்கு பெரிதாய் வாய்ப்பில்லை. நடித்தவரை குறையில்லை.

வில்லனாக, கண்களால் பேசும் வித்தை கற்ற விஜய் சேதுபதி. கைகலப்பைக் கூட மனிதர் கலகலப்பாக செய்கிறார். அள்ளுகிறது அப்ளாஸ்!

சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கெளரிகிஷன், என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்… திறமை காட்டியதில் நிறைவு!

‘வாத்தி கமிங் ஒத்து’ அனிருத் இசையில் பாடல்கள் அத்தனையும் கெத்து! தார்ச் சாலை பற்றியெறிந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது அந்த ஒல்லிப்பிச்சானின் பின்னணி இசை!

விஜய் – விஜய் சேதுபதி மோதிக் கொள்ளும் காட்சிகளில் பறக்கிறது தீப்பொறி.சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா!

ஒளிப்பதிவு சத்யன் சூரியன். காட்சிகள் அத்தனையும் பிரகாசம்!

படத்தின் பின்பாதி நீ…..ளம். ஆனாலும் சலிப்பு தட்டவில்லை!

ஏ.ஆர். முருகதாஸ், அட்லி போல் லோகேஷ் கனகராஜூம் தொடர்ந்து விஜய்யுடன் கைகோர்க்கவிருப்பது இனிப்பான செய்தி!

மாஸ்டர் – தியேட்டர்களில் தீபாவளி!

Related posts

Leave a Comment