‘பூமி’ சினிமா விமர்சனம்

‘பூமி’ சினிமா விமர்சனம்.

சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’

ஜெயம் ரவியின் 25-வது படம்!

ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார்.

சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன்

ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ!

ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!

படங்களில் வருகிற கார்ப்பரேட் வில்லன்கள் எப்படியிருப்பார்களோ அதன் ஜெராக்ஸாய் ரோனித் ராய். சொல்லிக்கொள்ளும்படி தனித்துவம் ஏதுமில்லை.

அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், லோக்கல் அரசியல்வாதியாக ராதாரவி… நடிப்பு வழக்கம்போல்.

விவசாயியாக வந்து, விரக்தியில் உயிர்விடும் தம்பி ராமையா மனதில் நிற்கிறார். ஒரு காட்சியில் எட்டிப் பார்த்தாலும் பத்திரிகையாளர் சு. செந்தில்குமரனின் தோற்றமும் நடிப்பும் கவர்கிறது. இன்னபிற நட்சத்திரங்களின் பங்களிப்பில் குறையில்லை.

வசனங்கள் பளீர் சுளீர்!

இமான் இசையில் கதையோடு சேர்ந்து பயணிக்கிற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ‘கடைக்கண்ணாலே’ பாடலில் கரையலாம்.

ஒளிப்பதிவு டட்லி. காட்சிகள் அத்தனையிலும் அவரது சிரத்தை சிறப்பு!

நாட்டையும் நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படியெல்லாம் சூனியமாக்குகின்றன என்பதை விலாவாரியாக எடுத்துக் காட்டிய அக்கறைக்காக படக்குழுவுக்கு அழுத்தமான பாராட்டு!

பூமி – வளம்!

Related posts

Leave a Comment