எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.- எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

அ.தி.மு.க.வில் பிளவுபட்டு கிடந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்த பின்பு அரசியலில் பரபரப்புடன் கூடிய அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 122 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் டி.டி.வி.தினகரன் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு புறம் அரசுக்கு தினகரனால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மற்றொரு புறம் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் நீக்கி கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதில் உச்சக்கட்டமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான அழைப்பு அனைவருக்கும் அனுப்பப்பட்டது. இதை ஏற்று இன்று காலை 9 மணியில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழகம் வரத் தொடங்கினார்கள்.

அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி. முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வைத்திலிங்கம், பொன்னையன், செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., வாலாஜாபாத் கணேசன், மோகன் உள்ளிட்டோர் தலைமை கழகம் வந்தனர்.

காலை 9.15 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகம் வந்தார். அவரை அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்று அழைத்து சென்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு தலைமை கழகம் வந்தார். அவரை தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பி வரவேற்றார்கள்.

அதன் பிறகு தலைமைக் கழகத்தில் உள்ள கூட்ட அரங்குக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. இணைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் தலைமை கழகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் தலைவர்கள் வந்தபோது வாழ்த்து கோ‌ஷம் எழுப்பி வரவேற்றார்கள். சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

தலைமை கழகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்துக்கு தினகரன் ஆதரவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தினகரன் ஆதரவு நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை.

Related posts

Leave a Comment

fourteen − 6 =