இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். மணீஷ் பாண்டே 50 ரன்களும், டோனி 49 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 375 ரன்கள் குவித்தது.

இதை தொடர்ந்து, இலங்கை அணியினர் 376 ரன்களை இலக்காக கொண்டு விளையாடினர். அந்த அணியில் மேத்யூஸ் 70 ரன்களும், சிரிவர்தனா 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி, 43 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். 131 ரன்கள் விளாசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டநாகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 36 வயதான மகேந்திரசிங் டோனி நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்த வீரர் என்ற சாதனைக்கு டோனி சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் இதுவரை 73 ஆட்டங்களில் ‘நாட்-அவுட்’டாக இருந்துள்ளார். இதில் 2-வது பேட்டிங் செய்கையில் 42 முறை ஆட்டம் இழக்காமல் நின்றதும் அடங்கும். இதற்கு முன்பு இலங்கையின் சமிந்தா வாஸ், தென்ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் தலா 72 முறை ‘நாட்-அவுட்’டாக இருந்ததே இந்த வகையில் அதிகபட்சமாகும்.
இந்த ஆட்டம் டோனிக்கு 300-வது ஒரு நாள் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் (463 ஆட்டம்), ராகுல் டிராவிட் (344 ஆட்டம்), முகமது அசாருதீன் (334 ஆட்டம்), சவுரவ் கங்குலி (311 ஆட்டம்), யுவராஜ்சிங் (304 ஆட்டம்) ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டும் இந்தியர் டோனி தான். ஒட்டுமொத்த அளவில் இந்த பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். டோனி ஒரு நாள் போட்டியில் 10 சதம், 65 அரைசதம் உள்பட 9,657 ரன்கள் குவித்து இருக்கிறார்.
