ஈரோட்டில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சி மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்றனர்.

பதில்: நாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாள் முதல் அவர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கள் தவறானது.
கேள்வி: 109 எம்.எல்.ஏ.க்கள் தான் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் மைனாரிட்டி அரசு தான் நடப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
பதில்: அ.தி.மு.க.வுக்கு 134 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டப்பேரவை தலைவர் உள்பட மொத்தம் 135 பேர் அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். பெரும்பான்மையுடன் இந்த ஆட்சி இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றனர். சிலர் பல்வேறு காரணங்களால் வரவில்லை. ஆனாலும் அ.தி.மு.க. அரசுக்கு அனைவரும் ஆதரவாகவே உள்ளனர்.
கேள்வி: நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நீட் தேர்வை பொறுத்த வரை தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என இறுதி வரை மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றார்.
கேள்வி: நீட்டை பொறுத்தவரை உங்கள் இறுதி முடிவு என்ன?
பதில்: நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.