மோடி பிறந்தநாள் : ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடி வருகின்றனர். இன்று 67-வது பிறந்தநாளை காணும் பிரதமருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை வாழ்த்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில் தி.மு.க தலைவரும் தனது தந்தை கருணாநிதி சார்பிலும், தி.மு.க கட்சி சார்பிலும் தாங்கள் நீடுழி வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவரான காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஞானத்தை அளிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 67-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் மாநில அரசும் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் நிபேந்திர பாண்டே, சட்டசபை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட மோடியின் 110 அடி உயர கட் அவுட் வைத்து அசத்தினார்.

லக்னோ கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஞாயேஷ்வர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு ஐந்து நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழவேண்டும் என பிரார்த்தனையும் நடைபெற்றது.

பா.ஜ.க. தலைவர்கள் 1,500 கிலோ லட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கினர்.

அரசு தொடக்க பள்ளிகளில் இன்று நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக பா.ஜ.க.வினர் கூறுகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1000க்கு மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 2-ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இறுதி நாளில் மாரத்தான் போட்டி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment

1 × 5 =