யார் இவன் – விமர்சனம்

கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின் ஜோஷி கொலை செய்கிறார். போலீசார் சச்சின் ஜோஷியை கைது செய்வதில் இருந்து தொடங்குகிறது படம்.

நாயகி இஷா குப்தாவின் கொலை வழக்கை கிஷோர் விசாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இஷா குப்தாவின் தோழி தன்யாவின் மூலம் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும் பணத்திற்காகத் தான் இஷா குப்தாவை சச்சின் ஜோஷி காதலித்ததாகவும் கிஷோருக்கு தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து சச்சினின் நண்பரான சதீஷ் கூறும்போது, சச்சின் ஜோஷி ஒரு கபடி விளையாட்டு வீரர் என்றும், கபடி அவருக்கு வாழ்க்கை என்றும் கூறுகிறார்.

இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடக்க, ஒரு கபடி போட்டியின் போது ஒருவரின் இறப்புக்கு சச்சின் ஜோஷி காரணமாக இருந்திருக்கிறார். இறந்தவர் ஜெயில் வார்டனின் தம்பி என்பதால், தற்போது ஜெயிலில் இருக்கும் சச்சினை கொல்ல முயற்சி செய்கிறார்.

இறுதியில் சச்சின் ஜோஷியை ஜெயில் வாடர்ன் பழி வாங்கினாரா? இஷா குப்தாவை சச்சின் ஜோஷி கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சச்சின் ஜோஷி கபடி வீரருக்கு ஏற்றார் போல் உடற்கட்டுடன் வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இஷா குப்தாவிற்கு பெரிதாக வேலை இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார். பிளாஸ்பேக் காட்சிகளில் சச்சின் ஜோஷியுடன் டூயட் ஆட மட்டும் வந்து போகிறார். நாயகியின் தோழியாக வரும் தன்யாவின் நடிப்பு ஓரளவிற்கு சரி என்றாலும், பல இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது.

வழக்கமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரபு. சதீஷின் காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை என்று சொல்வதைவிட இயக்குனர் சதீஷை சரியாக உபயோகப்படுத்த வில்லை என்றே சொல்லலாம்.

துப்பறியும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கிய இயக்குனர் சத்யா, திரைக்கதையில் அந்த வேகத்தை காட்டாமல் விட்டிருக்கிறார். ஒரு காட்சி சுவாரஸ்யமாக செல்லும் போது, படத்தின் பாடல்கள் முட்டுக்கட்டையாக வருகிறது. யதார்த்தமான விஷயங்கள் கூட செயற்கைத் தனமாக அமைந்திருக்கிறது. கபடி போட்டியின் போது வரும் சண்டைக்காட்சி ஏற்கும்படியாக இல்லை.

தமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். பெனன்ரா மேனனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது.

Related posts

Leave a Comment

fifteen + fourteen =