டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வழிமறித்து தமிழக போலீசார் விசாரணை: நடுரோட்டில் வாக்குவாதம்

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் விடுதியில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் 2 வேன்களில் புறப்பட்டு தலைக்காவிரிக்கு சென்று காவிரி நதியில் புனித நீராடிவிட்டு வழிபாடு நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அப்பி நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து வேன்களில் புறப்பட்டு மடிகேரிக்கு வந்தனர்.

மடிகேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் மாலையில் அங்கிருந்து வேன்களில் விடுதிக்கு புறப்பட்டனர். வேன் மடிகேரி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த வேன்களை கர்நாடக பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் நடுரோட்டில் வழிமறித்தன. இதையடுத்து டிரைவர்கள் வேன்களை நிறுத்தினர். அப்போது அந்த வாகனங்களில் இருந்து இறங்கி வந்த சிலர் அதிரடியாக எம்.எல்.ஏ.க் களின் 2 வேன்களிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும் வேனுக்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து வேன் டிரைவர்கள் அவர்களுடன் சென்றனர். பின்னர் அந்த வாகனங்களில் வந்த சிலர் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை மட்டும் தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் தமிழக போலீசார் என்றும், உங்களை கண்காணிக்கவே இங்கு வந்தோம் என்றும் கூறியதாக தெரிகிறது.

மேலும் நீங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும், அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நீங்கள் இங்கு தங்கி இருந்தால் அதற்கான விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனால் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும், தமிழக போலீசார் என்று கூறிக்கொண்டு வந்த அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வேனில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அங்கு நடந்த சம்பவங்களை தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுக்க முயன்றனர். இதையடுத்து தமிழக போலீசார் என்று கூறிக்கொண்டு வந்த அந்த நபர்கள் தாங்கள் வந்த வாகனங்களிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வேன்களில் மடிகேரிக்கு புறப்பட்டனர். அவர்கள் மடிகேரியில் உள்ள குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் இதுபற்றி விசாரணை நடத்துவதாக எம்.எல்.ஏ.க்களிடம் உறுதி அளித்தார்.

Related posts

Leave a Comment

three × one =