பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இன்று சென்னை வருகை: மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா?

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மறுநாளே (22-ந் தேதி) கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக குறைந்தது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கின.

இது தொடர்பாக கடந்த மாதம் 27-ந் தேதி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். மறுநாள் (28-ந் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்டோர் கவர்னரை சந்தித்தனர்.

ஆனால், அவர்களிடம் கவர்னர் வித்யாசாகர் ராவ், “இது அவர்களின் உள்கட்சி விவகாரம். மனு அளித்த 21 பேரும் அ.தி.மு.க.விலே தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தில் பந்து என்னிடம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார்.

கவர்னர் தெரிவித்த இந்த தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், “ஒரு வார காலத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.

கவர்னர் வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்த மறுநாளே (11-ந் தேதி) கவர்னர் மும்பை புறப்பட்டு சென்றுவிட்டார். தங்களின் புகாருக்கு எந்த பதிலையும் கவர்னர் அளிக்காததால், “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்குடன் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலும் இணைந்து கொண்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தலைமை வக்கீல், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கவர்னருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாததால் தற்போது எந்த உறுதியையும் கொடுக்க முடியாது. கவர்னர் 18-ந் தேதி (இன்று) சென்னை திரும்பிய பிறகு தான் முடிவு செய்ய முடியும்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில் தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார். அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், “நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வரும் அவர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். வரும் 20-ந் தேதி ஐகோர்ட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது, என்ன பதில் அளிப்பது? என்பது குறித்து விவாதிக்க உள்ளார்.

எனவே, சட்டசபை கூடும் தேதியை அறிவித்து, மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவார் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 20-ந் தேதி வரை ஐகோர்ட்டு தடைவிதித்து இருப்பதால், அதன்பிறகு இந்த பிரச்சினையில் கவர்னர் முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

அதே நேரத்தில், மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டால், அந்த பலப்பரீட்சையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டம் தீட்டிவருகிறார். தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலத்தை அதிகரித்துக்கொள்ள, டி.டி.வி.தினகரன் கைவசம் உள்ள 21 எம்.எல்.ஏ.க்களில் சிலரை தன்வசம் இழுக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் பலப் பரீட்சையை சந்திக்க தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், டி.டி.வி.தினகரன் அணியினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு உள்ளது. சபாநாயகரை சேர்த்தால் ஆதரவு எண்ணிக்கை 112 ஆக இருக் கும். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை இதுவரையில் அறிவிக்கவில்லை. தி.மு.க. கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னரோ அல்லது ஐகோர்ட்டோ உத்தரவிட்டால், ஆட்சியை காப்பாற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த நடவடிக்கை சபாநாயகரால் மேற்கொள்ளப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

Related posts

Leave a Comment

six + 6 =