மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தேசிய மனித உரிமை ஆணையம் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் இவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் வந்து உள்ளன. மேற்கண்ட இரு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வேண்டுதலின்படி சிறுமிகளை வலுக்கட்டாயமாக மாத்தம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.

இது தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறையின் வேறொரு வடிவம் ஆகும். இது குறித்து ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்து இருக்கின்றன. பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த மாவட்டங்களில் சிறுமிகள் மணமகள்களை போல் அலங்கரிக்கப்பட்டு இதற்கான சடங்கில் ஈடுபடுத்தப்படுவதாகவும், சடங்கு மற்றும் பூஜை முடிவடைந்த பிறகு அந்த சிறுமிகளின் ஆடைகள் 5 சிறுவர்களை கொண்டு களையப்பட்டு ஏறத்தாழ நிர்வாணமாக்கப்படுவதாகவும், பிறகு அந்த சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் வாழ அனுமதி மறுக்கப்படுவதாகவும் அந்த புகார்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்த சிறுமிகள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்படுவதோடு, அவர்கள் மாத்தம்மன் கோவிலில் தங்கவைக்கப்பட்டு பொதுச்சொத்து போல நடத்தப்படுவதாகவும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஆணையத்துக்கு வந்துள்ள புகார்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சடங்குகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் தீவிரத்தன்மை கொண்டவை. இது உண்மை என்றால், இது மனித உரிமை மீறலாகும். குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை மீறல் மட்டுமின்றி அவர்களுக்கு கல்விக்கான உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மறுக்கும் வன்முறை செயல் ஆகும்.

எனவே, இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டைரக்டர் ஜெனரல்கள், திருவள்ளூர், சித்தூர் மாவட்ட நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

Related posts

Leave a Comment