ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.முந்தைய கூட்டங்களில் ரஜினியின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்ட நிலையில் முதல் முறையாக ரஜினிகாந்த் நேரில் கலந்துரையாடினார்.

ரஜினிகாந்த் அவர்களிடையே பேசும் போது ரஜினிகாந்த், “காலா திரைப்படம் நெல்லை மாவட்ட கதை தான்.நீங்கள் மற்றவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுப்பவர்கள். ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன்.மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்.ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும் .
அரசியலில் கட்டமைப்புதான் முக்கியம். அடித்தளத்தை வலிமையுடன் அமைக்க வேண்டும் எனபதால்தான் நாம் இவ்வாறு செயல்படுகிறோம். இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும்.அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள வேண்டும்” என கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்திய தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறேன். அவர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு சில காலம் ஆகும். நேரம் வரும்போது சுற்றுப்பயணம் சென்று நேரடியாக ரசிகர்களை சந்திப்பேன். அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்த பின் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் குறித்து முடிவு செய்யப்படும். நானும் கமலும் வெவ்வேறு பாதையில் சென்றாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செல்கிறோம். கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. கமலின் மக்கள் நீதி மய்யம் நன்றாகச் செயல்படும் என நம்புகிறேன். அவர் திறமைசாலி என்பதால் சிறப்பாக செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.