திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 25ம்தேதி முதல் 5 நாட்கள் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதனால் அன்றைய நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் வரும் 25ம்தேதி தொடங்கி மார்ச் 1ம்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாளன்று இரவு 7.30 மணியளவில் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமரும், 2வது நாள் (26ம்தேதி) ருக்மணி சமேத கிருஷ்ணரும், 3ம்நாள் முதல் 5ம்நாள் வரை (27 முதல் 1ம் தேதி வரை) தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும் தெப்பலில் பவனி வருகின்றனர்.
முதல் 3 நாட்கள் நடக்கும் தெப்பல் உற்சவத்தில் 3 சுற்றுகளும், 4வது நாளில் 5 சுற்றுகளும், நிறைவு நாள் மற்றும் 5வது நாளில் 7 சுற்றுகளிலும் சுவாமி வலம் வந்து ருள்பாலிக்கிறார்.தெப்பல் உற்சவத்தையொட்டி வருகிற 25 மற்றும் 26ம் தேதி வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையும், 27, 28 மற்றும் மார்ச் 1ம் தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் தெப்பல் உற்சவ சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்