அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கட்சியின் தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகே ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக, “நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

ஜெயலலிதா சிலை திறப்புக்கு பின் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உடைக்க முயல்பவர்கள் மற்றும் ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் கனவெல்லாம் பகல் கனவாகவே முடியும். அவர்களால் இயங்கத்தையும் கலைக்க முடியவில்லை, ஆட்சியையும் கவிழ்க்க முடியவில்லை. நாங்கள் ஆட்சியை ஒற்றுமையாக நடத்தி வருகிறோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது. அம்மாவின் ஆசி இருக்கும்வரை அதிமுகவை யாரும் தொட்டுகூட பார்க்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ‘இந்த அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா; கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஒரு விரல் எம்ஜிஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும்.

மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன” என்றார்

Related posts

Leave a Comment

19 − seven =