கண்ணே கலைமானே- ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவின் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் வைரமுத்து. சமயங்களில் தன்னைச் சார்ந்தோரை ஆச்சர்யப்படுத்துவதில் இவர் தவறுவதே இல்லை. அப்படிப்பட்ட சூழலுக்கு சமீபத்தில் ஆளானவர்கள் ‘கண்ணே கலைமானே’ படக்குழுவினர்.

வாடிப்பட்டி பின்புலத்தில் நடைபெற்றுவரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் சீனு ராமசாமி, உதயநிதி, தமன்னா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது கவிஞர் வைரமுத்து, யாரும் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். “அவருடன் வேலை செய்வதே மிகப்பெரிய விஷயம் எனும்போது அவர் எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகை தந்தபோது உண்டான உணர்வுக்கு வார்த்தைகளே இல்லை” என்று சிலாகித்திருக்கிறார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமியின் இரண்டாவது திரைப்படமான தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தபோது, வைரமுத்துவுக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலுக்காகக் கிடைத்தது. அதற்கு முன்பிருந்தே வைரமுத்துவின் கவிதைகளாலும், எழுத்தினாலும் ஈர்க்கப்பட்டிருந்த சீனு ராமசாமி, தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் வைரமுத்து முதல்முறையாக அவரது படத்துக்கு பாடல்களை எழுதக்கேட்டார். அவரும் எழுதிக்கொடுத்து தேசிய விருதையும் பெற்றதிலிருந்து இருவருக்குமிடையேயான அன்பு அதிகரித்தது. சீனு ராமசாமியின் எல்லாப் படங்களிலும் வைரமுத்துவின் பாடல் இடம்பெறும் நிலையும் உண்டானது.

தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் கண்ணே கலைமானே திரைப்படத்திலும் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று வைரமுத்து ஆச்சர்யம் கொடுத்தது ஸ்பாட்டிலிருந்த அனைவருக்குமே புத்துணர்ச்சியை அளித்ததாக உதயநிதி கூறியிருக்கிறார். “அவர் வந்தார் என்று சொல்வது சரியாக இருக்காது. அவரைப்போல சிறந்த அறிஞருடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய வாழ்த்து என்று சொல்லலாம். அவரது பயணத்தில் அவர் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால், மற்றவர்களை எப்படியாவது ஊக்குவிக்க வேண்டும் என்று செய்யும் இதுபோன்ற செயல்கள் பலருக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவர் வந்து சென்றதும் அந்த இடமே பாசிடிவ் வைப்ரேஷனால் திளைத்தது” என்று வைரமுத்துவின் வரவைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Related posts

Leave a Comment

4 × two =