நடிகை ஸ்ரீதேவி காலமானார்

துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்  பட்டு   உள்ளார்.ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரியும் போது உடனிருந்திருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.. 54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1969 ஆம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர். தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே மயில் கேரக்டர் ஸ்ரீதேவியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய திரைப்படமாக அமைந்தது. மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி. மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான ‘MAMI’ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அசத்தும் நடிப்பாற்றல் காரணமாக தமது 13 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 1976-ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படமே ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த திரைப்படம்.கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசந்தகால நதி தனிலே… வைரமணி நீரலைகள் என்ற பாடல் கேட்க ரசணையாவும், பார்க்க த்ரில்லாகவும் இருக்கும். ரஜினி, கமல் ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் இந்த படத்தில் மிளிர்ந்தது. இத்தனைக்கும்
மூன்று முடிச்சில் அறிமுகமானலும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே திரைப்படம் மூலம்தான் ஸ்ரீதேவி பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டார். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள செந்தூரப்பூவே பாடலும். சப்பாணின்னா சப்புன்னு அடிச்சிரு என பேசிய வசனமும் ஸ்ரீதேவியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

 

பின்னாளில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளிலும் தம் நடிப்பாற்றலால் ரசிர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி. தமிழில் ஜொலிக்கத் தொடங்கிய பின் மலையாளத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஆலிங்கனம், குட்டவும் சிக்ஷையும், ஆத்யபாடம், ஆ நிமிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
1978 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீதேவி. இவர் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் சோல்வா சாவன். ஹிந்தியில் அவரது இரண்டாவது படமான ஹிம்மத்வாலா பெரும் வெற்றியை பெற்றது. இதன்பின்னர் சத்மா, சாந்தினி ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. பாலிவுட் நடிகர் அனில்கபூரின் அண்ணனும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூரை ஸ்ரீதேவி மணந்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஆறாண்டுகள் கழித்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு பின் இங்க்லீஷ், விங்க்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் அவர் கால்பதித்தார். இந்த திரைப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரவி உதய்வார் இயக்கத்தில் மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54 ஆவது பிறந்த நாளைகொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம்வெளியானது. இப்படி தலைமுறை கடந்து ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. எனினும் ரசிகர்களின் உணர்வுகளில் என்றும் ஈரக்காற்றாய் அவ்வவ்போது கடந்து செல்வார். அவருடைய மறைவிற்கு பலர் தங்கள் நினைவுகளை, இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

சற்று முன் வந்த  தகவல்:

ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் மருத்துவ நடைமுறைகள் முடிந்து தலைமை காவல் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரக அனுமதி கிடைத்தவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்திய கொண்டுவரப்பட உள்ளதாகவும் இன்று இரவு 8 மணிக்கு மும்பை கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

5 × one =