அரசியல் துறவறம் ; நாஞ்சில் சம்பத் அறிவிப்பு

தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ள நிலையில், இதற்கு தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுகவிலிருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்குக் கட்சியில் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியும், இன்னோவா காரும் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து அரசியலிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். பின்பு சசிகலா நேரில் அழைத்துப் பேசியதால் சமாதானமான சம்பத், அதிலிருந்து தொடர்ந்து தினகரன் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தார். தினகரனுக்கு ஆதரவாகப் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசியுள்ளார். அணி சார்பாக ஊடகங்களில் பேசும் முக்கிய நபராகவும் விளங்கிவந்தார்.

இதற்கிடையே தினகரன், கடந்த 15ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைத் தொடங்கியதையடுத்து, கட்சிப் பெயரில் திராவிடம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை.

கட்சியின் பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாஞ்சில் சம்பத், அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் தான் இருக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டு தினகரன் அணியிலிருந்து விலகியுள்ளார். இனி அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும், இலக்கிய மேடைகளில் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா, தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவன். மனிதனை மனிதனாக்கிய மகோன்னதத்தின் பெயர் திராவிடம். அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் திராவிட இயக்கம். திராவிடம் இல்லாத தமிழகம் என்று சங் பரிவார் சக்திகள் குரைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், திராவிடம் இல்லாத ஒரு பெயரைத் தன் கட்சிக்கு வைத்திருப்பதன் மூலம் ஒரு இமாலயத் தவறைத் தினகரன் செய்துள்ளார். கொள்கை திரவியத்தைக் கொட்டிக் கவிழ்த்திருக்கிறார். குலநாசம் செய்திருக்கிறார். பட்டப்பகலில் பச்சைப் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார். இந்தப் பாவத்தில் என்னால் பங்குகொள்ள முடியாது. ஆகவே தினகரன் அணியிலிருந்து விலகுகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், “தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தொடங்கப்பட்ட தற்காலிக இயக்கம்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். பெயரில் அம்மா வரும்போது நாஞ்சில் சம்பத் கேட்ட அண்ணாவும், திராவிடமும் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எங்களுடைய நோக்கம் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துச் சென்னை அடையாரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தினகரன், “அண்ணாவையும் திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது மாதிரி பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத். நான் கட்சியைத் தொடங்கியபோதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் முழு உருவமாக உள்ள அம்மாவின் பெயரிலே கட்சியைத் துவங்கியுள்ளோம் என்று கூறினேன் என்று குறிப்பிட்ட அவர், நான் பச்சைப் படுகொலை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏதோ அம்மாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல பேசியுள்ளார். நாஞ்சில் சம்பத் அம்மாவை அவமதிப்பதுபோல பேசியுள்ளதுதான் வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “இது ஒரு இடைக்கால அமைப்பு மட்டுமே. நான் தேர்தல் ஆணையத்தில் கட்சிக்குப் பெயரைக் கொடுக்கும்போது திராவிடம் என்ற பெயரில்தான் கேட்டேன். இது அவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வசதியாக மறைத்துக்கொள்கிறார். விண்ணப்பங்களின் பதிவில் காலதாமதம் ஏற்பட்டதால் பெயரை உடனே அறிவித்துள்ளோம். அண்ணா, திராவிடத்தை புறந்தள்ளிவிட்டதாகக் கூறுவது அம்மாவை அவமதிப்பது போன்றதாகும். இங்கிருந்து செல்வதற்காக நாஞ்சில் சம்பத் காரணம் தேடிக்கொண்டிருந்தார். தற்போது கிளம்பிவிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment

4 × 2 =