சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை !

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான சட்டத் திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் POCSO சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2012ஆம் ஆண்டு POCSO சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் இடாஹ் மாவட்டத்தில் இன்று 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்குத் மத்திய அரசு தீவிரமான செயல்திட்டங்களை அமல்படுத்தக் கோரி டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.

மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், “12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

Related posts

Leave a Comment

4 + 2 =