கனடாவில் சாலையோர பாதையில் ஓடிய வேன் ஏற்படுத்திய விபத்தில் 10 பேர் பலி

கனடா, டொரன்டோ நகரில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் மக்கள் வழக்கம்போல் தங்களின் பணிகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளை நிற வாடகை வேன் ஒன்று பாதசாரிகள் இருக்கும் கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய 25 வயதான அலெக் மினாசியன் என்ற இளைஞரை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இது குறித்து பேசிய அந்நாட்டு காவல்துறை அதிகாரி, இந்த விபத்தைப் பார்க்கும்போது இது எதிர்பாராமல் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னால் ஏதோ சதி உள்ளது. இதன் விசாரணை மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது என்று கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டொரன்டோ நகரில் நடந்த சோகமான மற்றும் முட்டாள்தனமான விபத்து குறித்து கேள்விப்பட்டேன். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து கனடா மக்கள் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

இந்தக் கடினமான சூழ்நிலையில் தைரியமாகவும் வேகமாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி பிற உயிர்களைக் காப்பாற்றுவதில் மிகவும் அக்கரையாக செயல்பட்டுள்ளனர். மக்கள் நகரங்களில் பாதுகாப்பாக நடந்து செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தச் சூழ்நிலையை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் மற்றும் அனைத்து கனட நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.”எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment