ஸ்டாலின் இனி ஒரு போதும் முதல்வராகவே முடியாது!- விஜயகாந்த் பேட்டி!

கூட்டணி ஆட்சிக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் 2016-ல் ஒத்து கொண்டிருந்தால் இன்று அவரும், நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். 2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தி ருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார்.நல்ல ஒரு வாய்ப்பை ஸ்டாலின் இழந்து விட்டார். இனி அவரால் ஒரு போதும் முதல்வராகவே முடியாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி இதோ:,

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக ஏன் கலந்து கொள்வதில்லை?

ஸ்டாலினை மையப்படுத்தியே அனைத்தும் நடைபெறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கென்று தனி நிலைப்பாடு இருக்காதா? ஏன் அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு ஸ்டாலினை புகழ் பாட வேண்டும்? அவர் என்ன மு கருணாநிதியா? ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே கற்பனை செய்து கொள்கிறார். இந்த கூட்டம் கருணாநிதியால் கூட்டப்பட்டிருந்தால், முதல் ஆளாய் நான் அங்கு சென்று இருப்பேன்.

ஏன் நீங்கள் ஸ்டாலினை எதிர்க்கிறீர்கள்? கருணாநிதி இப்போது ஆக்டிவாகவே இல்லையே.

எனது கொள்கை ஸ்டாலினுடன் எப்போதும் ஒத்துப் போவதில்லை. மற்றவர்கள் கலைஞர் கருணாநிதியை சந்திக்க நினைப்பதற்கு முன், நான் கருணாநிதியை சந்திக்க விரும்பினேன்.அவரை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அவரை சந்திக்க நான் வேறு சில முறைகளையும் கையாண்டேன். ஆனால், இறுதியில் ஸ்டாலினுடன் தான் இதுகுறித்து பேச வேண்டும் என்றார்கள். போன வருடம் தீபாவளி நேரத்தின் போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து எனக்கு போன் செய்யப்பட்டது. கருணாநிதியை சந்திப்பது குறித்து மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்றார்கள். அதற்காக நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒருநாள் அவர்கள் தொடர்பு கொண்டு, ‘இன்று சூரசம்ஹாரம் உள்ளது.. ஆகையால், இன்று சந்திக்க உகந்த நாள் இல்லை’ என்றார்கள். அதுவும் சரி தான் என நான் நினைத்தேன்.. ஆனால், அதன் பிறகு அங்கிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கும் அத்தோடு கலைஞரை சந்திக்கும் ஆர்வம் போய்விட்டது. மற்றவர்களுக்கு முன்பாக நான் கலைஞரை சந்திக்க விரும்பிய போது, திட்டமிட்டே ஸ்டாலின் எங்கள் சந்திப்பை தடுத்துவிட்டார்.

ஸ்டாலின் ஏன் அவ்வாறு செய்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 2016 தேர்தலில் அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காகவா?

ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை. கலைஞரை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கவே விரும்பினேன். 2016 தேர்தலின் போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து ஆட்கள் என்னை அணுகி, கூட்டணிக்காக பேசினார்கள். நாங்களும் அதில் ஆர்வமுடன் தான் இருந்தோம். நாங்கள் கேட்கும் சீட்டை கொடுத்துவிட்டால், கூட்டணி வைக்கலாம் என நினைத்திருந்தோம். பேச்சுவார்த்தையின் போது நாங்கள் 60 சீட் கேட்டோம். அவர்களோ 40 சீட் தான் கொடுக்க முடியும் என்றனர். அன்றே, எங்களது நிபந்தனைகளுக்கு ஸ்டாலின் உட்பட்டு அதிகார பங்கீடுக்கு ஒப்புக் கொண்டிருந்தால், இந்நேரம் என்னிடமும் அவர்களிடமும் அமைச்சர்கள் இருந்திருப்பார்கள். 2016ல் ஸ்டாலின் முதல்வராக அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அன்று அந்த வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். இனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது.

உங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் இப்போது திமுகவில் உள்ளார்களே?

ஆம்! அவர்கள் எல்லோரும் இப்போது திமுகவில் இருக்கிறர்கள். அவர்கள் தன்னை முதல்வர் ஆக்கி விடுவார்கள் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை அதை செய்யட்டும். அவர்கள் ஸ்டாலினை முதல்வர் ஆக்கட்டும்.

கமல்ஹாசன் கட்சியை அறிமுகம் செய்துள்ளார். ரஜினிகாந்த் விரைவில் தனது கட்சியை அறிவிக்கிறார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் மட்டுமல்ல இன்னும் 5 நடிகர்கள் கூட அரசியலுக்கு வரட்டும். எதுவும் நடக்கப்போவதில்லை. கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நிறைய கனவு காண்கிறார்கள்.  ரஜினி இன்னும் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கவில்லை. முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். அவரை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அது போல கமல்ஹாசனை கூட எந்த கட்சியும் ஆதரிக்கலாம். தி.மு.க. கூட கமலுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும்.

இவர்கள் இருவருக்கும் பின்னால் யாராவது இருக்கிறார்களா? ரஜினிக்கு பின்னால் பாஜக இருப்பதாக சொல்கிறார்களே?

அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. முதலில் அதை செய்யச் சொல்லுங்கள். கமல்ஹாசனுக்கு பின்னால் யாராவது இருக்கிறார்கள் என்றால், அது திமுகவாகத் தான் இருக்க முடியும்.

பாஜக?

நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் கூட பாஜக ஜெயிக்கப் போவதில்லை. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். கடந்த முறை லோக் சபாவில் 282 இடங்கள் பெற்று இருந்தார்கள். அடுத்த முறை 182 கூட அவர்கள் பெற மாட்டார்கள். தமிழகத்தில் என்றும் அவர்களால் காலூன்ற முடியாது.

Related posts

Leave a Comment

fourteen + 5 =