குட்கா முறைகேடு வழக்கு ; சி பி ஐ விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

குட்கா முறைகேட்டை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகக் கடந்த ஜனவரி 30ஆம் தேதி உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு வழங்கிய தீர்ப்பில், “குட்கா விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற அனுமதியளிக்கிறோம். தடையை மீறி குட்கா உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தையில் கிடைப்பது என அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர். மேலும், ”குட்கா ஊழல் என்பது சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு. நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண் போகக்கூடாது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குட்கா வழக்கு – முன் கதைச் சுருக்கம்

ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வருமான வரித் துறையினர், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறியிருந்தனர்.மேலும், இது குறித்துத் தனக்கு வருமான வரித் துறை எழுதிய கடிதத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு டிஜிபி அசோக்குமார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில், குட்கா முறைகேடு விவகாரத்தில் பல மாநில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், மாநிலக் காவல் துறையின் விசாரணை எப்படிச் சரியானதாக இருக்கும், ஆகவே வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்தனர்.

ஆனால் “லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. எனவே சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை” என்று தமிழக அரசின் சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

மேலும் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு தயங்குவது ஏன் என்றும் “, “தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயங்குவதால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் ஏதோ தீவிரம் அல்லது சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வழக்கின் வாதங்கள் ஜனவரி 25ஆம் தேதி முடிந்த நிலையில், 30ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment

twenty − 9 =