ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் மனு ;சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக சட்டப்பேரவையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த வழக்கில், ஒ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற்றது. அப்போது, கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்‍கள் அரசுக்‍கு எதிராக வாக்‍களித்தனர். எனவே, அவர்களை தகுதி நீக்‍கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், எதிர்க்‍கட்சி கொறடாவுமான சக்‍கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல், கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்செல்வன், வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேரும், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால், தலைமை நீதிபதி திருமதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கு தொடர்பான மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என . தங்கதமிழ்செல்வன் தரப்பு வழக்கறிஞர்  ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ட்ரா நியூஸ்

இதே போல் சட்டப்பேரவையில் திறக்‍கப்பட்ட மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படம் திறந்துவைக்‍கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அகற்ற வலியுறுத்தியும், தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்‍கப்பட்டது. சட்டப்பேரவை சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

 

Related posts

Leave a Comment

12 + fourteen =