பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சி மைதானத்தில் நடந்தது. இந்த இசை வெளியீட்டில் பேசிய ரஞ்சித், ரஜினி அளித்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தபின் ‘காலா’ திரைப்படம் மனித மாண்பை மீட்டெடுக்கும், மக்களுக்கான அரசியல் பேசும் படம் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “கபாலி படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அந்த பயத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தவர் ரஜினி, மீண்டும் ஒரு வாய்ப்பை தந்து என் பயத்தை நீக்கினார். நான் நேரில் பார்த்து பழகிய ரஜினியின் பவரை இதில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக நினைக்கிறேன். ரஜினியின் குரல் பவர்புல்லானது, அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் உருவானதே தொழிலாளர்களால் தான், இது மக்களுக்கான படம், மக்களுடைய படம், மக்களில் ஒருவருடைய படம், மக்களுக்கான அரசியல் பேசும் படம். மனித மாண்பை மீட்டெடுக்கும் போராட்டம் தான் இங்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. ‘காலா’ மனித மாண்பை மீட்டெடுக்கும் திரைப்படமாக உருவாயிருக்கிறது என நம்புகிறேன்” என பேசினார்.
இதில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இது ஆடியோ விழா போலவே தெரியவில்லை, படத்தோட வெற்றிவிழா போல் உள்ளது. ஏன் வெற்றிவிழா போல், இது வெற்றிவிழா தான். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைபடாமல் எனது வழியில் செல்வேன். 20 வருடங்களுக்கு முன்பே இந்த குதிரை நின்று விடும் என்று கூறினார்கள், ஆனால் இப்போதும் ஓடுகிறது. 40 ஆண்டுகளாக எனது கதை முடிந்துவிடும் என்று கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். கடைசியாக நான் கொண்டாடிய வெற்றிவிழா சிவாஜி தான், அந்த விழாவில் கருணாநிதி கலந்துக்கொண்டு பல விஷயங்களை பேசினார். அவரின் குரல் இன்னும் மறக்க முடியாது, கருணாநிதி குரல் விரைவில் கேட்கும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் அந்த குரல் மீண்டும் கேட்க வேண்டும், அது தான் என் விருப்பம்.
இமயமலைக்கு நான் போவதே கங்கையை பார்க்க தான் . சில இடங்களில் மானமாகவும் ரெளவுத்ரமாகவும் நடமாடிக்கொண்டும் போகும். தண்ணீர் பிரச்சனை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்துவிடுகிறது. தென் இந்திய நதிகளை எல்லாம் இணைய வேண்டும். அதுதான் எனது வாழ்வின் ஒரே கனவு. அப்படி நடந்தால் அடுத்த மறுகணமே நான் இறந்தால் கூட கவலை இல்லை.
’கபாலி’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறனிடன் ஒரு கதை கேட்டேன், மிகவும் அருமையான கதை. ஆனால் அரசியல் கதை, அப்போது எனக்கு அரசியலில் களமிறங்கும் எண்ணமில்லை அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டேன். ‘காலா’ அப்படியில்லை, படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் ‘காலா’ அரசியல் படமல்ல”

லிங்கா படத்திலிருந்து நல்லவனாக இருக்க வேண்டும் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என்ற பாடத்தை கற்று கொண்டேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைபடாமல் எனது வழியில் செல்வேன். 20 வருடங்களுக்கு முன்பே இந்த குதிரை நின்று விடும் என்று கூறினார்கள், ஆனால் இப்போதும் ஓடுகிறது. 40 ஆண்டுகளாக எனது கதை முடிந்துவிடும் என்று கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். நான் ஓட வில்லை, நீங்கள் ஓட வைக்கிறீர்கள் ஆண்டவன் ஓட வைக்கிறான் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்” என்றார்