ராஜீவ் காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ் தொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்புணர்வை யார் கைக்கொண்டு இருக்கிறார்களோ, வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அது சிறையாக இருக்கும் என்று என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறார். இன்று என் தந்தையின் 27வது நினைவு தினம். எனக்கு அன்பையும், அனைவரிடமும் மதிப்புடன், மரியாதையுடன் பழகும் பண்பைக் கற்றுக்கொடுத்த என் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தப் பண்புகள்தான் ஒரு தந்தை ஒரு மகனுக்கு அளிக்கும் விலைமதிப்பு மிக்க பரிசுகளாக இருக்கும். எங்களின் இதயத்தில் உங்களின் அன்பு என்றென்றும் பற்றிக்கொண்டிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே உட்படப் பலர் வீர் பூமியில் அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் புகைப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலரஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து பயங்கரவாத உறுதிமொழியை அக்கட்சியினர் ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேபோல், பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி அமர்ஜோதி யாத்திரை ரதம் இன்று ஸ்ரீபெரும்புதூர் வந்தடைகிறது.

Related posts

Leave a Comment

19 − four =