கமலுடன் டி டி வி தினகரன் கூட்டணிக்கு வாய்ப்பு! –

மக்கள் நலன் காக்கும் வகையில், எதிர்காலத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைந்து செயல்பட்டால் வியப்பில்லை என்று தெரிவித்துள்ளார் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன்.

கடந்த 19ஆம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ’காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டம் நடத்தப்பட்டது. பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாஸ், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் கலந்துகொண்டார்.

ஆண்டிப்பட்டியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு ஆண்டிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (மே 21) காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தங்க.தமிழ்செல்வன். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “மக்கள் நீதி மய்யம் சார்பாக, கமல்ஹாசன் நடத்திய விவசாயிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் அமமுக பங்கேற்றது. ஆனால், இந்த கூட்டணி தொடருமா என்று இப்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் காக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக இணைந்தால் ஆச்சர்யமில்லை” என்று அவர் கூறினார்.

கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய தங்க.தமிழ்செல்வன், பாஜகவின் சூழ்ச்சியை முறியடித்து காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார். ”காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தவரை, காவிரியில் தண்ணீர் தரமாட்டோம் என்று பிடிவாதமாகக் கூறிவந்தனர். தற்போது, அங்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஆணையத்தை அமைத்து, தமிழகத்திற்குக் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய தங்க.தமிழ்செல்வன், அடுத்து வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுத் தாங்கள் தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

Leave a Comment

ten + 9 =