உத்தரகாண்ட் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் பாரி கர்வால் மாவட்டத்தின் பாகுன் நகரில் இருந்து, ராம் நகருக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து கிவீன் கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 40 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பயணிகளை ஏற்றியதால் பேருந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பதாகவும் உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.  விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனை பிராத்திப்பதாக கூறியுள்ளார். இதேபோல், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரசிங், ஆளுநர் கே.கே.பால் ஆகியோர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment

eight + 18 =