காசு மேலே காசு – திரைப்பட விமர்சனம்!

நம் விக்கிபீடியாவில் குறிப்பிட்டது போல் தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். பாட்டு, சண்டை, காதல், பாசம், சோகம் ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவைக் காட்சிகளும் தமிழ்ப்படங்களின் இருக்கும் ஒரு வழமையான அம்சம். தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் பொதுவாக மையக் கதையோட்டத்துடன் இறுகப் பிணையாமல் தனியான இழையாகவே இருப்பது இயல்பு. முழுநீள நகைச்சுவைப் படங்களும் தமிழில் உண்டு. இங்கு ஒரு திரைப்படத்தின் மையக் கதையோட்டம் நகைச்சுவையைத் தூண்டுவதையே குறியாக வைத்து நகர்த்தப்படும். இந்த நகைச்சுவையை நம்பி திரையில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிக, நடிகைகள் எத்தனையோர் பேர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் மயில்சாமி.

அந்த மயில்சாமியின் மகன் ஷாரூக் நாயகனாக நடித்தப்படம் ‘காசு மேலே காசு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி தனது மகனை பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க வைத்து எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர்கள் பகுதியில் இருக்கும் பணக்கார வீட்டு பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்க சொல்கிறார். இதுஒருபுறம் இருக்க தனது அப்பாவும், அம்மாவும் பிச்சை எடுப்பதை விரும்பாத நாயகி காயத்ரி ரீமா, தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறாள். அதன்படி அவர்களது பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் வேலைக்கும் சேர்கிறாள்.

இந்த நிலையில் அந்த பங்களாவில் இருந்து வரும் காயத்ரி ரீமாவை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரி என்று நினைத்து, தனது மகனை காதலிக்க சொல்கிறார் மயில்சாமி. இதையடுத்து காயத்ரியிடம் தனது காதலை சொல்லும் ஷாரூக், காயத்ரியிடம் சம்மதமும் வாங்குகிறார்.

இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் காயத்ரி ரீமாவை கடத்தி செல்கின்றனர். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவளை உயிருடன் அனுப்புவதாக கூற, சொத்து ஆசையால், தனது வீட்டை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்கிறார் மயில்சாமி.

கடைசியில், காயத்ரி ரெமாவை மீட்டார்களா? காயத்ரி ரெமா பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்பது மயில்சாமிக்கு தெரிந்ததா? ஷாரூக் – காயத்ரி ரெமா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஷாரூக், பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகளில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி காயத்ரி ரெமா சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக வந்து செல்கிறார். படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு மயில்சாமி முக்கிய காரணமாக இருந்துள்ளார். நாயகியின் அப்பாவாக பிச்சைக்காரராக நடித்திருப்பவர் மயில்சாமியுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்திருக்கிறார்.

பேராசை பெருநஷ்டம் என்ற கருத்தை மையப்படுத்தி வழக்கமான கதையுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி. தற்போதைய அரசியல், சினிமா என அனைத்தையும் பிச்சைக்காரர் ஒருவரின் கண்ணோட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். வசனங்களுக்கு சிரிப்பு மழை கேட்கிறது. காமெடியுடம், சுறுசுறுப்பாக ரசிக்கும்படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

எம்.எஸ்.பாண்டியன் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சுரேஷ் தேவன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மொத்தத்தில் `வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்ற பழமொழிய நம்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படமிது

Related posts

Leave a Comment

20 − seven =