கோவையில் பேரிடர் பயிற்சியின் மாணவி மரணம் – பயிற்சியாளர் கைது!

கோவையில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பயிற்சியாளர் ஆறுமுகத்தைக் காவல்துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி  இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், உரிய முறையில் அனுமதி பெறாமல் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவர், கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (ஜூலை 12) இக்கல்லூரியில் என்எஸ்எஸ் பயிற்சி முகாம் தொடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் உட்பட மூன்று பேர், இந்த முகாமில் பயிற்சியளித்தனர். இந்தப் பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதிக்கும்போது காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், அவர் மரணமடைந்ததாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, பயிற்சியாளர் ஆறுமுகத்தை விசாரித்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர் இன்று (ஜூலை 13) ஆறுமுகத்தை கைது செய்தனர். மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது குறித்து, மின்னம்பலம் காலை 7மணி பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கோவை மாணவி உயிரிழந்தது குறித்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கல்லூரி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கே.பி.அன்பழகன் முதல்வருடன் ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது. தற்போது, பேரிடர் பயிற்சி அளித்த நெல்லை ஆறுமுகம் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் “கோவை தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பயிற்சி நடத்தவில்லை என்றும், மாணவி இறப்புக்குக் காரணமானவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றவர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. மாணவி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என பதிவிடப்பட்டிருந்தது.

பயிற்சியாளர் ஆறுமுகம் சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். 2016ஆம் ஆண்டு பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்று தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அளித்து வருகிறார். இதுவரை 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவி உயிரிழந்த நிலையில் கல்லூரிக்கு இன்று(ஜூலை 13 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment