12 வயது சிறுமியைப் பாலியல் வன்முறை செய்தவர்களை தாகிய வக்கீல்கள்!

சென்னையில் 12 வயதான சிறுமியைப் பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரும்போது இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், அங்குள்ள பள்ளியொன்றில் 7ஆம் வகுப்பு படித்துவருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், ப்ளம்பர்கள் உள்பட சில ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, அந்த சிறுமியைச் சீரழித்துள்ளனர். ஏழு மாதங்கள், அவர்கள் அந்தச் சிறுமியிடம் தங்களது அத்துமீறலைத் தொடர்ந்துள்ளனர்.

நேற்று (ஜூலை 16) சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார், 18 பேரை கைது செய்தனர். இன்று (ஜூலை 17) சென்னை உயர் நீதிமன்றத் திலுள்ள உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அனைவரையும் ஜூலை 31ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். முதல் மாடியிலுள்ள நீதிமன்ற அறையிலிருந்து அவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது, மாடிப்படியில் ஏறிய 10க்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்து விடுவித்து, 18 பேரையும் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் பேசியபோது, “சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டோம். இவர்களுக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவர். இலவச சட்ட உதவி மூலம் யார் ஆஜரானாலும், அவர்களைக் கடுமையாக எதிர்ப்போம். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்வோம்” என தெரிவித்தார்.

”சென்னையில் 12 வயதான சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. சிறுமியைப் பாலியல் வன்முறை செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். சிறுமியின் எதிர்காலத்தைச் சூறையாடியது காட்டுமிராண்டித்தனமானது. மனித உருவத்தில் மிருகங்களாக நடமாடிக் கொடூரத்தைச் செய்துள்ளனர். சிறுமிகள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை கவலைக்குரியது. பெண் குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர்” என திமுக செயலாளர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

Leave a Comment

three × 2 =