சூப்பர் ஸ்டாரைப் பாராட்டிய அதிமுக-வின் ’நமது அம்மா‘ நாளிதழ்!

உண்மையை உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்’ என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு நமது அம்மா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கடந்த 14- ம் தேதி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “நாட்டின் முன்னேற்றத்திற்காக எட்டுவழிச் சாலைத் திட்டத்தை வரவேற்பதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். லோக் ஆயுக்தா அமைப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

உச்சி வெயில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதான் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிற உள்நோக்க சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப்பார்த்து வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் களத்தின் உண்மையை உள்வாங்கி ரஜினிகாந்த் நிஜத்தைப் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடியார் அரசின் தூய்மையான தொண்டுள்ளத்திற்கு இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே… வரவேற்போம்… வாழ்த்துவோமே” என்றும் நன்றி தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு ஆதரவாகவே ரஜினிகாந்தின் கருத்துக்கள் இருந்துவரும் நிலையில், இதற்கு அமைச்சர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்

Related posts

Leave a Comment

six + 11 =