சங்கரன் கோவிலில் ஆடித் தபசு கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி தபசு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி தபசுக்கான கொடியேற்றம், ஆடி பெளர்ணமி 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திர தினத்தில் காலை வேளையில் கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்படுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு கொடியேற்ற விழா இன்று காலை 8.15 மணிக்கு நடைபெற்றது.
ஹரியும் சிவனும் ஒன்றே என்று மக்களுக்கு உணர்த்தும் அம்மன் தவமிருந்த தலம் சங்கரன் கோவில் ஆகும். ஆடி பெளர்ணமி உத்திராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீசங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிடைத்தது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அம்மனுக்கு காட்சி தரும் இறைவன் ஆடி பெளர்ணமி தினத்தில் மாலையில் உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாக தபசு கோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார். ஆடித்தபசு அன்று இரவு 12 மணி முதல் அதிகாலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுவதால் இந்த வருட தபசு காட்சிகள் முன்னதாகவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடித்தபசு விழாவை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வரவிருப்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.