திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளி சமையளர் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் சமையளராக பணியமர்த்தப்பட்டார். அவர் சத்துணவு சமைத்தால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப முடியாது என்று வேறொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் இடமாற்றப்பட்டார். இதை கண்டித்து, சமையளருக்கு ஆதரவாக சிலர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சார் ஆட்சியர் ஷ்ரவன் குமார், சமையலர் இடமாற்றத்தை ரத்து செய்ததுடன், பள்ளி தலைமை ஆசிரியர், இடமாற்ற உத்தரவை பிறப்பித்த ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் சமையலருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம். திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பண்ண போறோம்????” என்று ட்விட் செய்துள்ளார்.