நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சார வசதி ? – சோனியா மீது மோடி காட்டம்!

கடந்த காலத்தில்  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சார வசதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மின்சார வசதி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜானா’ அல்லது சௌபாக்யா திட்டத்தின் பயனாளர்களிடம் ஜூலை 19ஆம் தேதி வீடியோ கான்ஃபெரன்சிங் வழியாக நரேந்திர மோடி பேசுகையில், “முந்தைய அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளன. அப்போதைய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி 2009ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மின் வசதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அது 2009ஆம் ஆண்டில் நிறைவேறவில்லை. 2010, 2011ஆம் ஆண்டுகளிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை.

அப்போதைய ஆட்சியில் வலிமையான தலைவர்கள் எவரும் இல்லாததாலேயே இதுபோன்ற வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இப்போதைய அரசின் திட்டங்களில் குறை கண்டறிவதையே அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு மின் வசதி கிடைக்கவில்லை என்பது மிகவும் பரிதாபகரமானதாகும். எங்களது ஆட்சியில் 2018 ஏப்ரல் 28ஆம் தேதி அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்ட சாதனை நிகழ்ந்தது. அந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்” என்று கூறினார்.

2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள மின் வசதி இல்லாத 3.6 லட்சம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. அதோடு, 2018 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி வழங்கும் முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மோடி கூறினார்.

Related posts

Leave a Comment