சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள்: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு!

கோயில் சிலை கடத்தல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிலைக்கடத்தல் தொடர்பாக வழக்குகள் இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார்.

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில காவல்துறை மீது நம்பிக்கையில்லையா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கு காவல்துறை விசரணையில் வெளிப்படைத்தன்மை இருந்ததாக வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தரப்பு, வழக்கு விசாரணையை வெளிப்படையாக கூற முடியாது என்று வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் 8 ஆம் தேதி அரசின் கொள்கை முடிவு குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதேபோன்று, சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணை நிலை அறிக்கையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

Related posts

Leave a Comment

five × 5 =