இந்தோனேசியாவில் நில நடுக்கம்!

 ஆசிய நாடான இந்தோனேசியாவில்   17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட நிலையில் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6.46 மணி அளவில் லாம்போக்கின் வடக்கு கடலோர பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவானது. 45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்தும் 100–க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது. இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.
இதையடுத்து, இரு தீவுகளின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுற்றுலா மையங்களின் நீச்சல் குளங்கள் கடல் போல் பொங்கின. வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்பு களிலும் இருந்த மக்கள் வெட்டவெளி பகுதிக்கு விரைந்தனர். இதனால் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வார இறுதியில் விடுமுறையை கழிக்க பாலி, லாம்போக் தீவுகளின் கடற்கரையோர சுற்றுலா மையங்கள், அடுக்குமாடி விடுதிகள், உணவகங்களுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அலறியடித்துக்கொண்டு உயிர் பிழைக்க மேடான பகுதிகளை நோக்கி ஓடினர். உயிரை காப்பாற்றிக்கொள்ள ஏராளமானோர் தங்கும் விடுதிகளின் மாடிகளில் இருந்தும் கீழே குதித்தனர்.
கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் அனைவரும் உடனே மேடான பகுதிக்கு விரைந்து செல்லுங்கள். யாரும் அச்சம் கொள்ளவேண்டாம். நிலைமை இயல்பாகும்வரை அமைதியாக இருங்கள் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. எனினும் கடல் அலைகள் எதிர்பார்த்த அளவிற்கு எழாததால் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாம்போக் தீவின் மட்டாரம் நகரில் கடந்த 29–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கம் 17 பேரை காவு கொண்ட நிலையில் தற்போதும் அதே கிழமையில் லாம்போக்கை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

19 + nineteen =