வரும் 28-ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு!

திமுக பொதுக்குழு வரும் 28-ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி பேசப்பட்டது. அப்போது தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறிக்கையில் பொருள் என்ற இடத்தில் தணிக்கைக் குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி பேரணி செல்லவிருப்பதாக மு.க.அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment

three × five =