விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா! – முதல்வர் உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் 15 ஏக்கரில் பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவில், 56 அடி உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்புத் தளம் இந்தியாவிலேயே மிக உயரமானதாக அமைக்கப்பட்டுள்ளது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் படப்பிடிப்புத் தளத்தை திறந்து வைத்ததுடன், நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நாகரீக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றும், சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்குண்டு. திரைப்பட படப்பிடிப்பு தளங்கள் அதிகளவில் உருவாக வேண்டும். திரைத்துறையில் எம்ஜிஆர் அதிக புகழ் பெற்றதற்கு அவர் புரட்சி நடிகராக இருந்ததே காரணம்.

கடன் பெறாமல் கலைநிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி படப்பிடிப்பு தளத்தை ஃபெப்சி உருவாக்கியதற்கு பாராட்டுகள். இதேபோன்று தமிழகத்தில் மேலும் பல படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டால் தயாரிப்புச் செலவு குறையும். விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியரஜன், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment

2 × five =