மோடி அரசுக்கு பாடம் & எடப்பாடி அரசுக்கு கல்தா! – திமுக தலைவரான ஸ்டாலின் அதிரடி பேச்சு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

திமுக தலைவர்-பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 28) காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இரங்கல் தீர்மானம்

கூட்டத்தின் முதலில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞரின் மறைவு செய்தி கேட்டு உயிரிழந்தவர்கள், மறைந்த திமுக மூத்த முன்னோடிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கேரள வெள்ளம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கும் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தணிக்கை குழு அறிக்கை தாக்கல்

1.10.2016 முதல் 31.07.2017 வரையிலான தணிக்கை குழு அறிக்கையை தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் தாக்கல் செய்து பேசினார்.

தலைவரானார் ஸ்டாலின்

அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மைக்கைப் பிடித்து, தலைவர்- பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயரை பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிப்பார்கள். பொறுப்பேற்க உள்ளவர்களை தற்போது யாரும் இடையூறு செய்ய வேண்டாம். அவர்கள் இன்று மாலை அண்ணா அறிவாலயம் வந்து அனைவரின் அன்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.

தலைவர்-பொருளாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துப் பேசிய திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், “கலைஞரின் மகன் தலைவராக வர வேண்டும் என்று நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம் உங்கள் கருத்துக்கு விடப்படுகிறது. கலைஞரின் மகன் ஸ்டாலின், தனது இளம் வயதிலேயே கழகத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டு, நெருக்கடி நிலையின்போது ஒராண்டுக்கும் மேல் சிறைக் கொட்டடியில் துன்பங்களை அனுபவித்துள்ளார். பின்னர் சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பல்வேறு நிலைகளை கடந்து வந்த நிலையில், திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்திற்கு நான் எந்த கடமையும் ஆற்றவில்லை. ஆனால் மகன் என்ற முறையில் தன்னுடைய கடமைகளை சரிவர ஆற்றி, என்னை மகிமைப்பட வைத்திருக்கிறார் ஸ்டாலின். இப்படி ஒரு மகன் கிடைக்கப்பெற்றமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று கலைஞர் கூறியுள்ளார்.

தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில் 1307 பேர் முன்மொழியவும் வழிமொழியவும் செய்துள்ளனர். தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் தவிர யாரும் போட்டியிடாததால், ஸ்டாலின் கழகத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று தங்களது உற்சாக கரவொலியை எழுப்பினர். மேடைக்கு வந்த ஸ்டாலின், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பிறகு அன்பழகன் காலின் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு க.அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாளராக துரைமுருகன் தேர்வுசெய்யப்பட்டதாகவும் அறிவித்தார்.

செயல்தலைவர் பதவி நீக்கம்

திமுக செயல்தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்படுவதாகவும், புதிதாக தொழில்நுட்ப அணி உருவாக்கப்படுவதாகவும், மாவட்டத் தலைநகரங்களில்தான் கட்சி அலுவலகம் அமைய வேண்டும் என்றும் அங்கு கண்டிப்பாக ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்களின் ’அன்பு உடன்பிறப்புகளே’ என்று தன் உரையை தொடங்கினார். ஒரு பேர் உண்மையை சொல்லி என் உரையை தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல் பேச தெரியாது, பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளவும் தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவோடு இருக்கிறேன். இது பெரியார், அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக்கூடிய விதை.

வாழும் திராவிட தூணாக இருப்பவர் பொதுச்செயலாளர் க.அன்பழகன். கலைஞர் தன் அண்ணனாக பொதுச்செயலார் க.அன்பழகனை ஏற்றுக்கொண்டார். கலைஞரின் அண்ணனான பொதுச் செயலாளர் க.அன்பழகன் எனக்கு பெரியப்பா ஆவார். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது நூறு மடங்கு கடினமானது. பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. தலைவராக தேர்வு பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்.

என்னை பள்ளி பிள்ளையாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். எனது வளர்ச்சியை படிப் படியாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். கலைஞரின் மகன் என்று சொல்வதை விட கலைஞரின் தொண்டன் என்பதில் தான் பெருமை கொள்கிறேன்.

தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். திமுக தொண்டர்களின் ஒத்துழைப்புடன் மோடி அரசை அகற்றுவோம். தமது வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றே வாழ்வேன்.

இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதுகெலும்பில்லாத மாநில எடப்பாடி அரசை தூக்கி எறிவோம் என அவர் சூளரை ஏற்றார்.

ஸ்டாலினின் இந்த பேச்சால் பாஜகவுடன் நட்பு கொள்ள வாய்ப்பு உள்ளதோ என நினைத்து குழப்பத்தில் இருந்த உடன் பிறப்புகளுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

Related posts

Leave a Comment

7 + nineteen =