இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம்!

சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட வழக்கில், ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் நடைமுறைப் படுத்தப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசு சாலை விபத்து களைக் குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், இரு சக்கர வாகனங்களால் மட்டும் 15,601 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

இவை, மொத்த விபத்துக்களில் 40.53 சதவீதம் ஆகும். மேலும் 38,491 விபத்துக்களின் எண்ணிக்கை யில் 7,526 நபர்கள் இறந்துள்ளனர். இரு சக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,476 ஆகும்.  இதில் தலைக்கவசம் அணியாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,811. போக்கு வரத்துத் துறையில், இதுவரை 2.14 கோடி இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாகன எண்ணிக்கையில் 84 சதவீதம் ஆகும்.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்கின்றன. சாலை விபத்துக்கள் என்பது எதிர்பாராமல் ஏற்படுபவை. உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, நாம் சாலைகளில் பாதுகாப்பு நடவடிக் கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசமும், காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட்டும் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இல் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.

தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 177இன் படி உரிய அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியம் குறித்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வினை காவல் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை ஏற்படுத்தி வருகிறது” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

Leave a Comment

one × 4 =