வேலைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து, தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.
2003ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ராஜா. ஜெயம் படம் உள்பட இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ரீமேக்காகவே இருந்து வந்தது. 2015ஆம் ஆண்டு வெளியான “தனி ஒருவன்” திரைப்படம் இவரது சொந்த கதையாக இருந்தது.
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியடைந்தது. இயக்குநர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இந்த படம் வெளியாகி இன்றுடன் (ஆகஸ்ட் 28) 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தனி ஒருவன் இரண்டாம் பாகம் இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம் நண்பர்களே இன்று 28 ஆகஸ்ட் 2018. தனி ஒருவன் திரைப்படத்திற்கு இது மூன்றாம் ஆண்டு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வருடங்களாக்க ஆக அந்தப் படத்தின் மரியாதையை நீங்கள் உங்கள் அன்பால் பெரிதாக்கி கொண்டே போகிறீர்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான படமாக எங்களுக்கு அமைந்திருக்கிறது என்றால் அது உங்களால் மட்டுமே. இந்த ஒரு நல்ல நேரத்தில் அந்தப் படம் சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு ஒரு நல்ல விஷயமும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
அப்போது, அடுத்து நாம் செய்யப் போகிற படம் என்று ராஜா சொல்லும் போது ஜெயம் ரவி வீடியோவில் முன் வந்து “நான் தான் ஹீரோ” என்று சொன்னதும், மறுபடியும் ராஜா பேச ஆரம்பித்தார். “எனது அடுத்தப் படம் தனி ஒருவன் 2. கண்டிப்பாக முதல் பாகத்தை விட இன்னும் அதிகம் கஷ்டப்பட்டு சிறப்பாகக் கொடுக்க முயற்சி செய்வோம். இந்தப் படம் உங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையும். உங்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும்” என்று பேசியுள்ளார். விரைவில் இப்படம் பற்றிய முழுதகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.