திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஆகஸ்ட் 30) ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோயிலில், ஆவணித் திருவிழாவானது இன்று அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கியது. அங்குள்ள செப்புக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை திருச்செந்தூர் கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 5 மணிக்கு கொடிமரத்திற்கு விசேஷ பூஜை செய்யப்பட்டது.

இந்த ஆவணித் திருவிழா இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, வரும் 8ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடிநீர் பந்தல் அமைப்பது, திருவிழா நாட்களில் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டுச் சுகாதாரமாக வைத்திருப்பது, தற்காலிகக் கழிப்பிடங்கள் அமைப்பது, சிறப்புப் பேருந்துகளை இயக்குவது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பது, கூடுதலாகக் காவல் துறையினரை அமர்த்துவது உள்படப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment

seven − 6 =