‘இமைக்கா நொடிகள்’ வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி – அதர்வா முரளி!

ஏதாவது ஒன்றின் மீது முழு நம்பிக்கையையும் வைத்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நடிகர் அதர்வா முரளியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இமைக்கா நொடிகள் படத்தை பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் வெறும் ஒரு படமாக மட்டும் பார்க்காமல் படத்தின் அத்தனை நிலைகளிலும் உறுதியாக அதனோடு நின்றிருக்கிறார். கதை உருவாக்கம், படம் ரிலீஸ் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது வரை அதர்வாவின் ஈடுபாட்டை பற்றி சொன்னால் மிகையாகாது. படம் உருவாகும் முன்பே அதை அவர் தீவிரமாக எது நம்ப வைத்தது.
அதைப்பற்றி அதர்வா முரளி கூறும்போது, “டிமாண்டி காலனி படத்திற்கு முன்பே அஜய் ஞானமுத்து இந்த கதையை எனக்கு சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் இந்த படத்தை செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு நடிகருக்கும் இந்த கதை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன். இப்போது படத்தை ஒரு ரசிகனாக இருந்து பார்க்கும்போது, வழக்கத்திற்கு மாறான ஒரு திருப்தி கிடைக்கிறது” என்றார்.
இமைக்கா நொடிகள் இப்போது இந்த அளவுக்கு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் தயாரிப்பாளரை பற்றி அதர்வா கூறும்போது, “கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயக்குமார் சார் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. இந்த படத்தில் பல காட்சிகளுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது. குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைவதற்கு நிறையவே செலவு செய்தார்” என்றார்.
சிறந்த நடிகர்களுடன் நடித்ததை பற்றி அவர் கூறும்போது, ” நயன்தாரா மேடத்தை விட யாரையும் அந்த கதாபாத்திரத்தில் எங்களால் யோசிக்க முடியவில்லை. சிபிஐ அதிகாரி அஞ்சலியாக அவரை பார்த்து நீங்கள் வியந்து போவீர்கள். இந்த படத்துக்காக அவருடைய அர்ப்பணிப்பு அபரிமிதமானது. தன் நீண்ட கூந்தலை கதாபாத்திரத்திற்காக வெட்டி விட்டு வந்தார். குறிப்பாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் எந்த ஒரு நாயகியும் இந்த முடிவை எளிதாக எடுக்க மாட்டார்கள். அக்கா, தம்பியாக எங்கள் உறவு, சமகால உறவை பிரதிபலிக்கும். ராஷி கண்ணா காட்டிய நம்ப முடியாத ஈடுபாட்டை பாராட்டியே தீர வேண்டும். அவர் உதடசைவுகளையும், உச்சரிப்புகளையும் கூட கவனத்தில் வைத்திருந்தார். அனுராக் காஷ்யப் சார் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நம் எல்லோரையும் அவருடைய மிரட்டலான நடிப்பால்  பயமுறுத்தினார்” என்றார்.
மேலும், அதர்வா கூறும்போது இமைக்கா நொடிகள் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் இனிய அனுபவம். அதேபோல படத்துக்கும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருக்கிறது என்றார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன் சிவா மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆகியோரின் அசாத்தியமான உழைப்பு தான் இந்த படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் ஹாலிவுட் தரத்தை கொடுத்திருக்கிறது. தங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக, அனைத்து தளங்களிலும் வெளிப்படுத்தி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் அதர்வா நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட இமைக்கா நொடிகள் வர்த்தக வட்டாரங்களில் வெற்றிப்படமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓபனிங் ‘அதர்வா ஒரு வணிக நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதை காட்டுகிறது’.

Related posts

Leave a Comment