மு.க.அழகிரியின் அமைதிப் பேரணி நடந்து ‘முடிந்தது’!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அவருடைய மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

திமுகவில் அழகிரி – ஸ்டாலின் இடையே மோதல் வலுத்தது. இதையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் மீண்டும் இணைவதற்கு அழகிரி பல முயற்சிகளை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்நிலையில், கருணாநிதி மறைந்து ஒரு வார துக்கம் அனு சரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தினார். தன் குடும்பத்தினருடன் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி செய்தியாளர்களிடம், “என்னுடைய ஆதங்கத்தை என் தந்தையிடம் தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். அது என்ன என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என்னையே ஆதரிக்கின்றனர். ஆதங்கம் கட்சிக்குள்தான், குடும்பத்திற்குள் இல்லை. காலம் இதற்கான பதிலைச் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆதரவாளர்களுடன் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி செல்லுவேன் எனவும் அழகிரி அறிவித்தார். அதற்காக மதுரையில் உள்ள தனது இல்லத்திலேயே ஆதரவாளர்களை பலகட்டங்களாக சந்தித்து வந்தார்.

திமுக குறித்தும் ஸ்டாலின் தலைமை குறித்தும் விமர்சித்தார். ஒருகட்டத்தில், திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி அழகிரி தலைமையில் புதன்கிழமை காலை அமைதி பேரணி தொடங்கியது. முன்னதாக, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து பேரணிக்காக அழகிரி ஆதரவாளர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். பாதுகாப்புக்காக பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

லட்சக்கணக்கில் தொண்டர்களை கூட்டுவேன் என அழகிரி கூறிய நிலையில், ஆதரவாளர்கள் எண்ணிக்கை தெளிவாக இன்னும் தெரியவில்லை. ஆதரவாளர்கள் அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியின் உருவம் பொறித்த கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர். காலை 11.20 மணியளவில் அழகிரி, தன் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்தார். அவருடைய ஆதரவாளர் இசக்கிமுத்து, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மன்னன் உள்ளிட்டோருடன் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனத்தில் பேரணியின் முன்னே வர தொண்டர்கள் பின்னால் வந்தனர். பேரணி திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து தொடங்கியது.

பின்னர் செய்தியாளர்களை அழகிரி சந்தித்த போது அவர் கூறியதாவது: பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணிதான், அரசியலுக்கான பேரணி இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர் என்றார்.

 

Related posts

Leave a Comment