ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துவருகின்றனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இவர் களின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்ததால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 7பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியது. ஆனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது. இதற்கிடையே 7பேரின் விடுதலை குறித்து 2016ஆம் ஆண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியிருந்தது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் எழுதலாம் என்றும் தெரிவித்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.

தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி. அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி அவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை இன்றே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Leave a Comment

six − 1 =